search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான பொருள்"

    கட்டுமான பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆதிவாசி மக்கள் ஜமாபந்தியில் குற்றம்சாட்டினர்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை செங்குட்ராயன் மலை ஆதிவாசி குடியிருப்பு உள்ளது. இங்கு 8 ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மேலூர் ஊராட்சியின் 14-வது வார்டுக்குட்பட்டதாகும். இங்கு வசிக்கும் மக்களுக்கு குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக 4 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி தொடங்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டும் பணி தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தனியார் எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதி இரும்பு கதவு அமைத்து உள்ளதால் வாகனம் மூலம் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என்று ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் செங்குட்ராயன் மலை ஆதிவாசி மக்கள் மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் செங்குட்ராயன் மலை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 4 வீடுகள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தனியார் எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதியில் இரும்பு கதவு அமைத்து உள்ளதால் கட்டுமான பொருட்கள்கொண்டு செல்ல முடியவில்லை.

    இதனால் கடந்த 3 மாதங்களாக பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கடிதம் அனுப்பியும் தனியார் எஸ்டேட் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வீடுகள் கட்டி தர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    ×